கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில், பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட தகராறில் பாஜக எம்எல்ஏவின் மகள் ஐஸ்வர்யா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ பி. சுரேஷ் கவுடாவின் மகளான ஐஸ்வர்யா, ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆரத்தி உக்கடா கோயிலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கோயிலின் உள்ளே நேரடியாகச் செல்ல அவர் முயன்றதாகவும், கூட்ட நெரிசல் காரணமாக வரிசையில் காத்திருக்குமாறு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சவிதா பி. பாட்டீல் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் கோயிலில் பீமா அமாவாசை விழாவையொட்டி அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் மாண்டியா மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சவிதா பாட்டீல் ஈடுபட்டிருந்தார். ஐஸ்வர்யா தனது இரண்டு குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாகச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு போலீஸ் அதிகாரி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

</p

>

வைரலாகி வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது தெரிகிறது. அதன் பின்னர் ஐஸ்வர்யா காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாகக் கூறப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து சுற்றியிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரை பணியில் தடுத்தல், தாக்குதல், அவமதித்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காவல் அதிகாரி தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக ஐஸ்வர்யாவும் எதிர்புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக எம்எல்ஏ பி. சுரேஷ் கவுடா தனது மகளின் செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களில் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கோயில்களில் விஐபி நடைமுறை காரணமாக இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அனைவருக்கும் சமமான தரிசன வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, இரு தரப்பினரும் அளித்த புகார்கள் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.