மும்பையில் கணவனால் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயதான அர்பாஸ் சையத் என்ற நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அர்பாஸ், தனது மனைவியை வீட்டை விட்டு வெளியே போகவிடாமல் சிறைப்பிடித்து, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என மிரட்டியதோடு மட்டுமில்லாமல், தனது மனைவியை விபரீத தண்டனையான ‘கோழி முட்டி’ (Rooster Position) போட வைத்து, தொடர்ந்து 4 மணி நேரம் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளார். இந்த நரக வேதனையிலிருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பெண், ஒருவழியாக கணவனிடமிருந்து தப்பித்துத் தனது தாய் வீட்டிற்கு ஓடிப் புகுந்தார்.

ஆனால், அங்கேயும் விடாமல் துரத்திச் சென்ற அர்பாஸ் சையத், மாமனார் வீட்டில் புகுந்து மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துள்ளார்.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அர்பாஸை அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அர்பாஸ் சையத் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 19 கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்ட ஒரு பிரபல ரவுடி என்பது தெரியவந்துள்ளது.

தற்போது காயமடைந்த மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்பாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.