மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதியில் திரிணாமுல் மற்றும் பாஜக தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் களமிறங்கியதால் பதற்றம் இரட்டிப்பாகியுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து ஈவிஎம் இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து ரகசியமாக ஈவிஎம் இயந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் தொண்டர்கள் திரண்டு போராட்டத்தைத் தொடங்கினர்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் 5 முக்கிய குற்றச்சாட்டுகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் யாருமில்லாத நேரத்தில், விதிகளை மீறி தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளைத் திறப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பிலேயே இந்த ‘தேர்தல் ஊழல்’ நடப்பதாக திரிணாமுல் சாடியுள்ளது.  வாக்காளர்களை மிரட்டியும், பெயர்களை நீக்கியும் வேலைக்காகாததால், தோல்வி பயத்தில் பாஜக ஈவிஎம் இயந்திரங்களில் கைவைப்பதாகக் கூறியுள்ளனர்.

 

 

இந்த முறைகேட்டைக் கண்டித்து நேதாஜி உள்விளையாட்டு அரங்கம் முன்பு சஷி பாஞ்சா, குணால் கோஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் மம்தா பானர்ஜியும் இணைந்துள்ளார். “டெல்லி நிலப்பிரபுக்களே (மத்திய அரசு), மக்களின் தீர்ப்பைத் திருடுவதை பெங்கால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என திரிணாமுல் காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈவிஎம் இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணும் நடைமுறை முறையான பாதுகாப்புடன் நடந்து வருவதாகவும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதற்கிடையில் தான் போட்டியிடும் பவானி பூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று கிட்டத்தட்ட 4 மணி நேரமாக முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருந்த நிலையில் வாக்குப்பதிவில் யாராவது முறைகேடு செய்ய துணிந்தால் வாழ்வா சாவா போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.