ரயில் நிலையங்களில் மொபைல் போன், பர்ஸ் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவது பலருக்கு அனுபவமாக இருக்கலாம். ஆனால், நம் பாக்கெட்டில் இருக்கும் பொருள் எப்படி காணாமல் போகிறது என்பதே தெரியாத அளவுக்குத் திருடர்கள் மிக லாவகமாகச் செயல்படுகின்றனர். இது தொடர்பான ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ரயில் பிளாட்பாரத்திற்கு வந்து நிற்கிறது. பயணிகள் அவசரம் அவசரமாக ரயிலில் ஏற முயல்கின்றனர். இந்த நெரிசலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திருடன், பயணி ஒருவரின் பின்னாலேயே ரயிலில் ஏறுவது போல் நடிக்கிறான்.
முன்னால் செல்லும் பயணி ரயிலுக்குள் நுழையும் அந்த ஒரு விநாடி கவனச்சிதறலைப் பயன்படுத்தி, திருடன் மின்னல் வேகத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை வெளியே இழுக்கிறான். மொபைலை எடுத்த அடுத்த நொடி, மிகச் சாதாரணமாகக் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்து விடுகிறான். போனை பறிகொடுத்த பயணிக்குத் தான் திருடு போன விஷயமே தெரியாமல் ரயிலுக்குள் சென்றுவிடுகிறார்.
ट्रेन में चढ़ते समय चोर कैसे फोन और पर्स चोरी करते है।आखिर इसको कैसे रोक जाए? pic.twitter.com/rAXsdoGTw7
— Mohit Kumar Jha (Sangam) (@Mohitjhasangam) April 30, 2026
பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் அவசரத்தைத் திருடர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். ரயிலுக்குள் நுழையும் அந்த ஒரு விநாடி பதற்றத்தில் பயணிகள் தங்கள் உடைமைகளைத் தற்காலிகமாக மறக்கின்றனர். திருடிய பிறகு திருடர்கள் ஓடாமல், மிகச் சாதாரணமாக நடப்பது போல் அங்கிருந்து நழுவி விடுவார்கள்.
மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “திருடர்கள் எவ்வளவு சாதுரியமாக இருக்கிறார்கள் என்று வியப்பு தெரிவித்துள்ளனர். கூட்டமான இடங்களில் ஒரு சின்ன கவனக்குறைவு கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும், இனி பயணத்தின் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
