கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது மாயமான கேரளத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா ஜி.எஸ் (36), நான்கு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) பத்திரமாக மீட்கப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த சரண்யா, குடகில் உள்ள நாப்போக்லு அருகே உள்ள யவகபாடியில் தங்கி தடியண்டமோல் மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்றார். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வனத்துறை அலுவலகத்தில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு அவர் மலையேறத் தொடங்கினார். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் குழுவாகச் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியதன் பேரில், சுமார் 10 பேர் கொண்ட குழுவினருடன் அவர் சென்றார்.

ஆனால், மலை உச்சியில் ஒரு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா, தான் மெதுவாக வருவதாகக் கூறிவிட்டு மற்றவர்களிடமிருந்து பிரிந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் தான் வழிதவறிவிட்டதாகத் தங்கியிருந்த விடுதிக்குத் தகவல் கொடுத்தார். அதன் பிறகு செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பெண் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பிறகு சரண்யா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

குழுவினரைத் தேடி நடந்தபோது அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தேன். என்னிடம் வெறும் 500 மிலி தண்ணீர் மட்டுமே இருந்தது. முதல் நாள் காலில் ஏற்பட்ட வலியால் ஓரிடத்திலேயே தங்கிவிட்டேன். இரண்டாம் நாள், ட்ரோன் மூலம் தேடினால் தெரிய வேண்டும் என்பதற்காகத் திறந்தவெளிப் பகுதியில் அமர்ந்திருந்தேன். மழையினால் பாறைகள் வழுக்கியதால் என்னால் அதிகம் நகர முடியவில்லை. தினமும் காலையிலும் மாலையிலும் உதவி கேட்டுச் சத்தமிட்டேன். இன்று ஒரு மரத்தின் மேல் அமர்ந்து சத்தமிட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னைக் கண்டுபிடித்தனர்,” என்றார்.

சரண்யாவைத் தேடும் பணியில் வனத்துறை, காவல்துறை, நக்ஸல் தடுப்புப் படை, மோப்ப நாய் படை என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். அடர்ந்த காடு மற்றும் மோசமான வானிலை காரணமாகத் தேடுதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை பெரும்பாலான குழுக்கள் திரும்பிய நிலையில், உள்ளூர் ஆதிவாசி மக்கள் அடங்கிய குழுவினர் சரண்யாவின் குரலைக் கேட்டு அவரை மீட்டனர்.

மேலும் உடல்நலத்துடன் மீட்கப்பட்ட சரண்யா, உடனடியாக மடிக்கேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.