லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி தோல்விக்கு பிறகு விராட் கோலி ஏமாற்றம் அடைந்து உட்கார்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு  அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் விராட் கோலி 16 பந்துகளில் 22ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆர்சிபி அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியல் 9வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ட்ரெஸ்ஸிங் ரூமில் நாற்காலியில் சோகமாக அமர்ந்திருந்தபோது தனது கையை மடக்கி, நாற்காலியில் குத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தற்போது ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் விராட் கோலி, ஐபிஎல் 2024 இல் 200 ரன்களை எடுத்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோலி 4 போட்டிகளில் 203 ரன்கள் குவித்துள்ளார்..