தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாக பதவியேற்ற பிறகு, எதிர்பாராத பல மெகா திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவிலான எம்.எல்.ஏ-க்களை வெற்றி பெற வைத்து TVK  நிகழ்த்திய மாயாஜாலம், பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் TVK வை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்று  5 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முன்னணி நிர்வாகிகள் கூண்டோடு TVK வில் இணையவுள்ளனர். இந்த அதிரடி தாவலால், தமிழக அரசியல் களம் 360 டிகிரி சுழன்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் வியக்கின்றன.

TVK வில் இணையவுள்ளோரின் முதன்மைப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் எஸ். வளர்மதி ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் உச்சக்கட்ட சஸ்பென்ஸாக, திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மு.க. அழகிரியின் மகளுமான காயல்விழியும்  TVK வில் இணைய வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகளும் TVK வில் இணையவுள்ளனர். சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், சி. விஜயபாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதிமுகவை விட்டு விலகுவதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், “நாங்கள் நீங்கள் எடுத்த சில முடிவுகளைத் தான் எதிர்த்தோமே தவிர, உங்களின் தலைமையை அல்ல. உங்களை பொதுச்செயலாளர் ஆக்க நாங்கள் அனைவரும் பாடுபட்டோம். ஆனால், எங்கள் கருத்துகளையும் தொண்டர்களின் உணர்வுகளையும் நீங்கள் மதிக்கவில்லை. மிகுந்த வேதனையோடு உங்களை விட்டு பிரிகிறோம்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.