தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வரும் நிலையில், அந்த மேடையில் தவெக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் அதிமுக. ஆனால், அதே திமுகவுடன் இணைந்து எப்படியாவது ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார் என்றும், இது அவர் எம்ஜிஆருக்கும் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த அதிமுகவையும் தனலாபத்திற்காக அடகு வைக்க நினைத்தார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதனால் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகியும் தவெகவில் இணைய வேண்டும் என்றும், அவ்வாறு வரும் அனைவரையும் தவெக திறந்த மனதோடு, அன்போடு வரவேற்கிறது என்றும் அழைப்பு விடுத்துள்ளார். தவெக மேடையில் நேரடியாக அதிமுகவின் தலைமை மீதே இத்தகைய கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், தமிழக அரசியலில் பரபரப்பான புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
