தமிழ்நாட்டில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ஆகிய இரண்டு வகை ரேஷன் கார்டுகளின் உறுப்பினர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு குறிப்பிட்ட அளவுக்குக் கோதுமையை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்தச் சலுகையைப் பெறுபவர்கள், ஆதார் சரிபார்ப்பு வாயிலாக, ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற விற்பனை முனையக் கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த முக்கியப் பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையைப் பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து, இந்தப் பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், “விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தப் பணியை முடிப்பதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கட்டம் எதுவும் நிர்ணயிக்கவில்லை” என்று விளக்கமளித்தனர்.
