
நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில ரேஷன் கார்டுகள் மூலமாக முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு தற்போது போலி ரேஷன் கார்டுகளை முடக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ரேஷன் உணவு பொருட்களை முறைகேடாக பெறுவதற்காக பலர் போலி ரேஷன் கார்டுகளை வெளிமாநிலங்களில் பெற்றிருப்பது குறித்து உணவு பொருள் வழங்கல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தம் 19.5 லட்சம் ரேஷன் கார்டு குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஒரே குடும்பங்களை சேர்ந்த நபர்களின் பதிவுகள் வேறு இரு இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு சோதனை நடத்தியதில் மொத்தம் 34,000 பேர் போலி ரேஷன் கார்டுகளை பெற்றிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களின் விவரங்களை மாநில தகவல் துறை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக இமாச்சல அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த கோடி ரேஷன் கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.