மதிமுக  துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தற்போது கடுமையான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஒருவர்மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை மல்லை சத்யாவும், வைகோ தரப்பும் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வைகோவின் நடத்தைக்கு எதிராக, நீதி கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் நடைபெறும் மக்கள் மன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்காக சென்னை காவல் ஆணையத்தில் அனுமதி கோரி மனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரின் மனுவை போலீசார் ஏற்று, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

மல்லை சத்யா கூறியதாவது: “நான் கடந்த 32 ஆண்டுகளாக பொதுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது அன்பையும், பணிவையும், தொண்டை கௌரவமாக மதிக்காமல் `துரோகி’ எனப் பழித்துள்ளார் வைகோ. இது என் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் செயல். எனவே, நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருப்பேன்” எனத் தெரிவித்து, மதிமுக உள் உட்கட்சி வேறுபாடுகள் மேலும் தீவிரமடையும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்.