கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணி அணுகுமுறையையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சி தனது போலி வாக்குறுதிகளால் மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டது. இப்போது அது தனித்து இயங்க முடியாமல், பிராந்தியக் கட்சிகளின் தயவில் பிழைப்பு நடத்தும் ஒரு ‘ஒட்டுண்ணி’ அரசியல் சக்தியாக மாறியுள்ளது. எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவதில்லை; அவர்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் அதிருப்தி அடையத் தொடங்கிவிடுகின்றனர்,” என்று சாடினார்.
தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய பிரதமர், “தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் – திமுக இடையே நெருங்கிய உறவு உள்ளது. பல நெருக்கடியான நேரங்களில் காங்கிரஸை மீட்டெடுத்ததே திமுகதான். 2014-க்கு முன்பு காங்கிரஸ் நடத்திய 10 ஆண்டு கால ஆட்சி திமுகவின் துணையால்தான் நீடித்தது. ஆனால், இவ்வளவு காலம் தன்னோடு இருந்த திமுகவுக்கு, அதிகார ஆசை வந்தவுடன் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டது. கூட்டணிக் கட்சியின் முதுகில் குத்துவதே காங்கிரஸின் இயல்பு,” எனத் தெரிவித்தார்.
பாஜகவின் வளர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், “ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இன்று 100 தொகுதிகளைக் கடக்கவே திணறுகிறது. அதே நேரத்தில் பாஜக நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் 3 எம்.எல்.ஏ-க்களுடன் இருந்த பாஜக, இன்று 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது (மேற்கு வங்கத்தில் பாஜகவின் அசாத்திய வளர்ச்சியைச் சுட்டிக்காட்டினார்). கேரளாவிலும் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறது; அங்கு பெரும்பான்மை பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நிர்வாகம் என்ற அத்தியாயமே இல்லாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் புத்தகத்தில் பொய்களும், துரோகங்களும் மட்டுமே நிறைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தனது உரையில் மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
