பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்குக் கிடைக்கவிருந்த 30 லட்சம் ரூபாய் சம்பளத்துடனான வேலை வாய்ப்பை, தனது மகப்பேறு கால விவரத்தை வெளிப்படுத்திய பிறகு நடந்த கசப்பான அனுபவத்தால் துணிச்சலுடன் நிராகரித்துள்ளார்.
மேலும் நேர்காணல் செயல்முறையின் போது அவர் தனது குடும்பச் சூழல் மற்றும் மகப்பேறு விடுப்பு குறித்து நேர்மையாகத் தெரிவித்த நிலையில், நிறுவனத்தின் அணுகுமுறை மிகவும் சுரண்டல் தன்மையுடனும் பாரபட்சத்துடனும் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “இந்த முடிவிற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன்” என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்கால கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நிலவும் முறையற்ற போக்குகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. திறமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தாய்மையின் அடிப்படையில் வேலை வாய்ப்பை மதிப்பிடுவது நியாயமற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியிடத்தில் சமத்துவமும், நேர்மறையான அணுகுமுறையும் மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தப் பெண்ணின் துணிச்சலான முடிவு, பணியிடங்களில் நிலவும் இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு வலுவான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
