தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொங்கரபட்டி கிராமத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இருமத்தூர் சந்திப்பு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் குமாரசாமியின் கடைக்கு சென்று தங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அடையாள அட்டையை காண்பித்து 3 பேரும் கடைக்குள் இருந்து பொருட்களை சோதனை செய்தனர்.

இதனையடுத்து கடையில் காலாவதியான பொருட்களை இருப்பதாக கூறி 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் அபராதம் விதிப்பதற்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறோம் என குமாரசாமியிடம் கூறியுள்ளனர். இதனால் செல்போன் செயலி மூலம் 10 ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டு உங்கள் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது நான் போய் போலீசில் புகார் அளிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். இதனால் அச்சத்தில் மூன்று பேரும் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீண்டும் குமாரசாமிக்கு அனுப்பி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

உடனடியாக குமாரசாமி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து கம்பைநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் வேடியூரைவை சேர்ந்த அறுந்து விற்பனை பிரதிநிதி சுபாஷ்(26), பேக்கரி கடை ஊழியர் பிரவீன்(22), தொழிலாளி சுப்பிரமணி(23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.