கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே இருக்கும் நேரு நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வழி அமைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழில் தொடர்பாக கணேசன் காட்டூருக்கு சென்றபோது 2 பேர் அவருக்கு அறிமுகமாகியுள்ளனர். இருவரும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதனை நம்பி கடந்த 2019-ஆம் ஆண்டு கணேசன் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதற்கு மாதந்தோறும் வட்டியும், இரண்டு முறை லாப தொகையும் கொடுத்தனர். இதை நம்பி கணேசன் மேலும் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அதன் பிறகு 3 லட்சம் ரூபாய்க்கான வட்டி மற்றும் முதலீடு தொகையை திரும்ப கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து கணேசன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் டிரேடிங் நிறுவன மேலாளர் பாலச்சந்திரன், ஊழியர்கள் செல்வராஜ், ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.