தெலுங்கானா மாநிலம் சைதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வரும் மூன்று வயது சிறுவன், ஆசிரியரின் தாக்குதலால்  தலையில் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வரும் அவுலா ஈஷ்வர் என்ற சிறுவன், பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் டிபன் பாக்ஸை அவர்மீது வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை மணிகண்டா கூறுகையில், “என் மகனின் தலையில் காயம் ஏற்பட்டதாக பள்ளியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பள்ளிக்கு சென்றபோது, அவர்கள் கொடுத்த விளக்கம் , உங்கள் மகன் மற்றொரு குழந்தையுடன் சண்டை போட்டதால் காயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி மறைக்க முயற்சித்தனர். ஆனால் உண்மையில் என் மகனை ஆசிரியர் ஒருவர் டிபன் பாக்ஸால் அடித்ததால் தான் காயம் ஏற்பட்டது” எனக் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த பெற்றோர் ஆவேசமடைந்து, சைதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பள்ளியின் இந்த செயல்  குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.