ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிரடியான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அந்தத் தொகையை அரசே ஏற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

​சமூகத்தின் மற்ற பிரிவினரையும் கவரும் வகையில், சிறுபான்மையின மகளிருக்குச் சுயதொழில் தொடங்க வடியில்லா கடனுதவி வழங்கப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை தற்போதுள்ள தொகையிலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக சில வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாம் கட்ட அறிவிப்புகள் தேர்தல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் சொன்னதைச் செய்வோம்” என முழங்கிய EPS-ன் இந்தப் பேச்சு, ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.