யூடியூபில் “மிஸ்டர் பீஸ்ட்” என்ற பெயரில் பிரபலமான ஜிம்மி டொனால்ட்சன், தற்போது தனது 27-வது வயதில் பில்லியனர் பட்டத்தை எட்டியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,300 கோடியாகும். இது அவரை 30 வயதிற்குட்பட்டவர்களில் சொந்தமாக பணம் சம்பாதித்து பில்லியனராக உயர்ந்த எட்டாவது நபராக மாற்றியுள்ளது.மாதந்தோறும் 50 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் இவர், உலகின் முதலிடம் வகிக்கும் கன்டன்ட் கிரியேட்டராகவும் திகழ்கிறார்.

ஜிம்மி தனது 13-வது வயதில் YouTube-ல் வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் கேமிங், கமெண்டரி வீடியோக்கள் வழங்கிய இவர், பின்னாளில் தனக்கு கிடைக்கும் பணத்தை பொதுநலத்திற்காக செலவழிக்கும் விதமான சவால் சார்ந்த வீடியோக்களால் புகழ்பெற்றார்.

இவருடைய MrBeast YouTube சேனல் தற்போது 39 கோடி பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. அவர் தொடங்கிய “MrBeast Burger” மற்றும் “Feastables” சாக்லேட் நிறுவனங்களும் மாதம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் தருகின்றன.

“Beast Philanthropy” என்ற பெயரில் தொடங்கிய அவரது தொண்டு நிறுவனம் மூலம், பல்வேறு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 100 கார்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் ‘Team Trees’ திட்டத்தின் மூலம் 20 மில்லியன் டாலர்களை மர நடுவதற்காக திரட்டியுள்ளார்.

“நான் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக மக்களுக்காக பயன்படுத்துவேன்” எனும் அவரது தன்னலம் பாராத எண்ணம்தான், அவரை மிகச்சிறந்த மனிதர் மட்டுமல்ல, உலகத்திலேயே அதிகம் மதிக்கப்படும் YouTube பிரபலம் என்றும் மாற்றியுள்ளது.