லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் போட்டி என்றாலே, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் ரியாக்ஷன்களுக்குப் பஞ்சமிருக்காது.
வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அல்லது சொதப்பினாலும் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுபவர் அவர். முன்னதாக கே.எல். ராகுல் கேப்டனாக இருந்தபோது, தோல்விக்குப் பிறகு கோயங்கா அவரிடம் கோபமாகப் பேசியது பெரிய சர்ச்சையானது. அதேபோல் இந்த சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான ஆட்டத்தின் போதும் அவர் விவாதித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், தற்போது ஒரு வரலாற்று வெற்றியை லக்னோ அணி பதிவு செய்துள்ள நிலையில், கோயங்காவின் மகிழ்ச்சியான முகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா (KKR) அணி, ரஹானே (41), ரகுவன்ஷி (45), கேமரூன் கிரீன் (32) மற்றும் ரோவ்மன் பவல் (39) ஆகியோரின் அதிரடியால் 181 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆயுஷ் பதோனி (54) அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். எனினும் அவர் ஆட்டமிழந்த பிறகு கொல்கத்தா பக்கம் வெற்றி திரும்பியது. அந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
வெறும் 27 பந்துகளில் 54 ரன்கள்* விளாசிய முகுல், இதில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டார். போட்டியின் கடைசி பந்தில் லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த முகுல், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரடியாக மைதானத்திற்குள் வந்து முகுல் சவுத்ரியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
7-வது வரிசை அல்லது அதற்குக் கீழே களம் இறங்கி 7 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் டிஜே பிராவோவின் (2018) சாதனையை முகுல் சவுத்ரி சமன் செய்துள்ளார். 8-வது விக்கெட்டுக்கு முகுல் மற்றும் ஆவேஷ் கான் ஜோடி சேர்த்த 54 ரன்களே*, ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக இலக்கை துரத்தியபோது எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் லக்னோ அணிக்கு இது 5-வது வெற்றியாகும். குறிப்பாக ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 2023-ல் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி பெற்ற பிறகு, லக்னோ அணி சேஸிங்கில் கடைசி பந்தில் பெறும் இரண்டாவது த்ரில் வெற்றி இதுவாகும்.
Goenka ki team…. iss team ka Goenka!
Mukul and Sanjiv Goenka ❤️
LSG, what a crazyyyy team! pic.twitter.com/zK2Ih4PkLq
— Gaurav (@iamGrvJ) April 9, 2026
