ஐபிஎல் 2026 தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் முகுல் சௌத்ரி ஒரு அசாத்தியமான இன்னிங்ஸை ஆடி கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.
181 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியின் விளிம்பில் இருந்தபோது களமிறங்கிய முகுல், வெறும் 27 பந்துகளில் 54 ரன்களை விளாசி திகைக்க வைத்தார்.
இதில் 7 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக, தோனி ஸ்டைலில் அவர் அடித்த ‘ஹெலிகாப்டர் ஷாட்’ ஒட்டுமொத்த ரசிகர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இக்கட்டான சூழலில் பதற்றமே இல்லாமல் சிக்ஸர் மழை பொழிந்த முகுல், லக்னோ அணிக்கு ஒரு இமாலய வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
தனது இந்த அதிரடி ஆட்டம் குறித்துப் பேசிய முகுல் சௌத்ரி, இதற்காகத் தான் தினந்தோறும் 100 முதல் 150 சிக்ஸர்கள் அடிக்கப் பிரத்யேகப் பயிற்சி மேற்கொள்வதாகவும், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உழைத்து வருவதால் பேட் வேகம் (Bat Speed) அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது அபாரத் திறமையைக் கண்ட லக்னோ பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவிலேயே 6 அல்லது 7-வது வரிசையில் களமிறங்கும் அச்சுறுத்தலான பேட்ஸ்மேனாக முகுலை மாற்றிவிடுவேன் எனச் சவால் விடுத்துள்ளார்.
2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட முகுல், சையத் முஷ்டாக் அலி தொடரிலேயே தனது அதிரடியைக் காட்டியிருந்த நிலையில், தற்போது ஐபிஎல் அரங்கிலும் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
