கடலூரில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர் காந்தி ஈரோடு சரஸ்வதி, திரைப்பட இயக்குனர் கங்கை அமரன், நடிகை நமீதா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து பேசிய போது, குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தொடர்ந்து 27 வருடங்களாக ஆட்சி சாதனை படைத்து வருகிறது.

குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 53 சதவீதம் வாக்கு பெற்றுள்ளோம். தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்கள் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் பா.ஜ.கவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 128 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி 40 தொகுதிகளில் 36 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. நம்முடைய ஜனநாயகத்தில் ஒருமுறை ஆட்சியில் இருந்தாலே மக்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் தொடர்ந்து 27 வருடங்களாக ஆட்சி நடத்தும் பா.ஜ.க மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அதிலும் மோடி மீதான ஈர்ப்பு மக்களிடம் எந்த விதத்திலும் குறையாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. குஜராத் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு பாடம். இமாச்சல பிரதேசத்தில் ஒருமுறை ஆண்ட கட்சி அடுத்த முறை ஆட்சி அமைப்பது இல்லை. அவ்வாறு இருந்தும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் நமக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே. அதன் அடிப்படையில் பாஜக மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.