தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில், ஒரு இளம்பெண்ணின் பெயர் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட 26 வயதே ஆன இளம் மருத்துவர் கோகிலாமணிக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மிக இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். படித்து முடித்த கையோடு மக்கள் பணியாற்றத் துடிக்கும் இந்த இளம் வேட்பாளரை களம் இறக்கியதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற செய்தியை திமுக சொல்லாமல் சொல்லியுள்ளது.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எனத் தகுதியானவர்களைத் தேடிப்பிடித்து இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.