தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளைத் தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இதற்காகத் தேர்தல் ஆணையக் குழு கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் தங்கி, பல்வேறு மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது. வாக்குப்பதிவு மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கையிருப்பு போன்றவற்றை ஆய்வு செய்த அக்குழு, தற்போதைய ஏற்பாடுகள் மிகுந்த திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வரும் பிப்ரவரி 26-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். சென்னையில் தங்கும் அவர், தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் இறுதி கட்ட ஆலோசனைகளை நடத்துவார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் அவர், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் இப்போதே உச்சகட்ட பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
