சமீப நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் புதிய மோசடி சம்பவம் மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEMமருத்துவமனையில் பணியாற்றும் 27 வயது மருத்துவர் ஒருவர் சீயோன் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 25 பிளேட் சமோசாக்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஆன்லைன் மோசடியில் சிக்கி 1.40 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மருத்துவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர்களின் பயணத்திற்கு சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளனர் . ஆன்லைனில் ஒரு உணவகத்தின் தொடர்பு எண்ணை கண்டறிந்த பிறகு, அதில் சமோசா ஆர்டர் செய்துள்ளனர். தொலைபேசி எண்ணை அழைத்தபோது ஆர்டரை பெற பதில் அளித்த நபர் 25 சமோசாக்களுக்கு 1500 ரூபாய் முன்பணமாக கேட்டுள்ளார்.

அதன் பிறகு ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஆர்டரை உறுதி செய்தல் மற்றும் வங்கி கணக்கு எண்ணை கொண்ட வாட்ஸ் அப் செய்தி மருத்துவருக்கு வந்துள்ளது. இதனை நம்பி மருத்துவர் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு 1500 ரூபாய் பரிவர்த்தனை செய்துள்ளார். மறுமுனையில் இருந்த மோசடி நபர் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை ஐடியை உருவாக்குமாறு மருத்துவரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் சொல்லியதை செய்து கொண்டிருந்தபோது மருத்துவரின் வங்கி கணக்கிலிருந்து திடீரென 28,807 ரூபாய் காணாமல் போனது.

அதன் பிறகு சிறிது நேரத்தில் கணக்கில் இருந்த மொத்த தொகையான 1.40 லட்சம் பறிபோனது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்ற ஆன்லைன் மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.