அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

“எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட நான், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன், அது நடக்கவில்லை. என்னைத் திட்டமிட்டுக் வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், தான் தவெகவில் இணைந்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்ட அவர், “தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தூய்மையான அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார். நேர்மையான ஆட்சியை கொடுக்க ஒருவர் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், தவெகவுக்கு வெற்றி கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும், 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார்.

பள்ளிக்குழந்தைகள் கூடத் தங்கள் பெற்றோரிடம் ‘விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்’ என்று கூறும் நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தைக் கட்டமைத்துள்ளார்” என்று பாராட்டினார். அத்துடன், தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச் சென்றபோது சந்தித்த அமைச்சர் சேகர்பாபு குறித்து எழுந்த வதந்திகளை மறுத்த அவர், “அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்கவே இல்லை.

திமுகவில் இருந்தோ, பாஜகவில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை. தினம் ஒரு கட்சிக்குச் சென்றவன் நான் அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.