நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 மத்திய பட்ஜெட்டில், இறக்குமதி வரி மற்றும் சுங்க வரி மாற்றங்களால் பல முக்கிய பொருட்களின் விலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை குறையவுள்ளது.
மேலும், புற்றுநோய்க்கான 17 முக்கிய மருந்துகள் மற்றும் உயிருக்காக்கும் 7 மருந்துகள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது சாமானியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. செல்போன்கள், மொபைல் உதிரிபாகங்கள், சோலார் பேனல்கள், லித்தியம் பேட்டரிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் விலைக்குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், சில பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு சவாலாக அமையக்கூடும். புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை அதிகரிக்க உள்ளது. இரும்பு, நிலக்கரி மற்றும் உப்பு போன்ற கனிமங்கள், குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மற்றும் சொகுசு பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பத்திர பரிவர்த்தனை வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால், பங்குகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான செலவும் இனி அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சுகாதாரத்துறைக்கு சாதகமாகவும், ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்களுக்குக் கடுமையான வரிவிதிப்பை நோக்கியும் அமைந்துள்ளது.
