பீகார் மாநிலத்தில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற ஒரு இளைஞர், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பக்கடுவா விவா’ என்று அழைக்கப்படும் இந்த முறையற்ற திருமண கலாச்சாரம் இன்றும் அங்கு தொடர்வதை இச்சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது விருப்பத்திற்கு மாறாக, மிரட்டல் மற்றும் வன்முறை மூலம் ஒரு பெண்ணை மணக்க வைக்கப்பட்டதாகக் கூறி, தற்போது தனக்கு நீதி வேண்டி காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் வீட்டினர் திட்டமிட்டு இளைஞரை வரவழைத்து, அவரைப் பணயக்கைதியாக வைத்து திருமணச் சடங்குகளை நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் நவீன இந்தியாவைப் பற்றி நாம் பேசினாலும், பீகாரின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வரும் இந்த “திருட்டுத் திருமண” கலாச்சாரம், தனிமனித சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
