2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது திட்டமிடலை வேகப்படுத்தி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் இன்னொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து என நான்கு முனைப் போட்டி உறுதியான நிலையில் உள்ளது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் இணைவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனவரி மாதத்திற்குப் பிறகு தான் கூட்டணி குறித்த முடிவை எடுப்போம் என தேமுதிக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு புதிய அணி உருவாகும். ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியும், என்.டி.ஏ. கூட்டணியும் உள்ளது.

அதேபோல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் விஜய் தலைமையிலான தனி அணியும் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், நீங்கள் என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், “என்.டி.ஏ-வில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

எனினும் நாங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவு வழங்குவோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைப்பு மற்றும் அரசியல் கணக்கீடுகள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.