தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு கொடுத்ததோடு இந்திய ராணுவத்தையும் மோடி அரசையும் பாராட்டினார். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை விட இன்று தான் மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரதமர் நரேந்திர மோடி தனி நபராக இல்லாமல் 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ள ஒன்பது இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்காக தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்காக எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட போவது கிடையாது. திமுக, அதிமுக மற்றும் பாஜக என எந்த கட்சியாக இருந்தாலும் கண்டிப்பாக தேசப்பற்றோடு இருக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும் நிலையில் விரைவில் கூட்டணியை முடிவு செய்வதற்காக ஆபரேஷன் சிந்தூர் போன்று தமிழகத்தில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் தொடங்கப்படும்.  2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பதற்காக வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் தொடங்கப்படும் என்று கூறினார். மேலும் கூட்டணி தொடர்பாக திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.