தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்களிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ விளம்பரம் செய்ய விரும்பினால், அதற்கு முன்-சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் விளம்பரத்திற்கு 3 நாட்களுக்கு முன்பும், மற்றவர்கள் 7 நாட்களுக்கு முன்பும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஊடகக் கண்காணிப்புக் குழுக்கள், விளம்பரங்களை ஆய்வு செய்து 48 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கும். தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தவறுகளைத் தடுக்கவும் கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட விளம்பரங்களில் “இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது” என்ற தெளிவான லேபிளை இட வேண்டும்.
ஒருவரின் அனுமதி இன்றி அவரது குரலையோ அல்லது உருவத்தையோ தவறாகச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான பதிவுகள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டால், 3 மணி நேரத்திற்குள் அவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்படும்.வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 75,037 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.
அதன்படி, அவர்களின் ஆண்டு ஊதியம் 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 2025-2026 ஆம் ஆண்டிற்கு சுமார் 99.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்புத் திருத்தப் பணிகளுக்காக கூடுதலாக 2,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நகர்ப்புறங்களில் வசிக்கும் வாக்காளர்கள் எளிதாக வாக்குச் செலுத்த ஏதுவாக, அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குழு வீட்டு வசதி வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 14 இடங்களில் இத்தகைய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற முழக்கத்தோடு, தேர்தல் ஆணையம் வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
