நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்பு இருப்பதாக பாஜக மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சிறப்பான வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக ஒரு தேசியக் கட்சியின் நிர்வாகியே கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, கூட்டணி அமைப்பது குறித்து விஜய்யுடன் பாஜக மூத்த தலைவர் பேசியதாக வெளியான தகவல்களைத் தவெக தலைமை ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜக சார்பில் வரும் நவம்பர் 29ஆம் தேதி கும்பகோணத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளதாக நாச்சியப்பன் அறிவித்துள்ளார். கும்பகோணம், மாநிலத்தின் மையப்பகுதி என்பதால் அங்கு அனைத்துப் பிரிவு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 என்ற நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு, எதிர்வரும் தேர்தல்களுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
