
நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தால் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் மத்திய அரசாங்கம் பண மதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான நடவடிக்கையை மறைக்க புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்கள் மத்தியில் பண பரிமாற்ற விஷயத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அரிதாகவே இருந்தது. இவை பரிமாற்றத்திற்கு சரியான தொகை அல்ல என்று கடந்த 2016-ம் ஆண்டே நாங்கள் கூறினோம். அது தற்போது உண்மை என்று ஆகிவிட்டது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து பண மதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மீண்டும் 500 ரூபாய் நோட்டுகள் வந்தது. இதே போன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் ஒரு வழியாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை முழு சுழர்ச்சியை பெற்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.