
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லவீரா என்ற கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தின் போது, மணமகளின் இல்லத்திற்கு மணமகனை குதிரையில் அழைத்து வர திட்டமிட்டனர். ஆனால் திருமண வீட்டார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மனமகன் குதிரையில் வரக்கூடாது என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் தெரிவித்தனர்.
இதனால் மணமகனை குதிரையில் அழைத்து வரும்போது உரிய பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி விஜய்க்கும், அருணாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது லவீரா கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மணமகன் விஜய் திருமணம் நடைபெறும் பகுதிக்கு குதிரையில் வந்தார். அவருக்கு பாதுகாப்பாக 200 காவல் துறையினரும் உடன் வந்தனர். காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மணமகன் விஜய் குதிரையில் மணமகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.