
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே தனியார் பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். உடனே தனியார் பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கி தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.