விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே குறும்பட இயக்குநர் ஒருவரை, துணை நடிகை தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் துணை நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 7-ஆம் தேதி, அரகண்டநல்லூர் அடுத்த சவுக்குத்தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததால், இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்த போலீசார், உடலை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 3-ஆம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய நபர் ஒருவர், வழி தெரியாமல் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. சைபர் கிரைம் உதவியுடன் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, கொலை செய்யப்பட்டவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் (40) என்பது உறுதியானது.

போலீசார் ஜெயக்குமாரின் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவருக்கும் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை பூஜா (20) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பூஜாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பூஜாவை, ஜெயக்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனக்கு ஏற்கனவே தேவா (24) என்ற காதலன் இருப்பதை பூஜா கூறியும், ஜெயக்குமார் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பூஜா தனது காதலன் தேவாவிடம் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவரை வரவழைத்துள்ளனர். இதற்காக இரண்டு சிறுவர்களின் உதவியுடன் ஜெயக்குமாரை சவுக்குத்தோப்பிற்கு அழைத்துச் சென்று, தேவா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக துணை நடிகை பூஜா, அவரது காதலன் தேவா, நண்பர் அய்யப்பன், தோழி துர்கா மற்றும் உடந்தையாக இருந்த 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.