தற்போது மழைக்கால முடிவடைந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடை காலம் வந்து விட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்றபடி தக்க நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி அரசு கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக விரிவான குடிநீர் திட்டத்தின் மூலமாக கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீரை சுத்திகரித்து மானிய விலையில் விநியோகிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த கால தாமதம் ஏற்படும் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.