டெல்லியின் தெற்கு மேற்கு த்வார்கா பகுதியில், 35 வயதான கரண் தேவ் என்பவர் தனது மனைவி சுஷ்மிதா தேவ் மற்றும் அவரது காதலரான ராகுல் தேவால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் தேவ், சுஷ்மிதாவின் மைத்துனராவார். ஜூலை 13ஆம் தேதி கரணின் மரணம் முதலில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டது என கூறப்பட்டாலும், பின்னர் அவரது தம்பி குனால் கண்டுபிடித்த சாட்சியங்கள் இந்த கொலை பின்னணியை வெளிக்கொணர்ந்தது.
சம்பவத்தன்று, கரணை மின்சாரம் தாக்கியதாக சுஷ்மிதா அவரது குடும்பத்தினரிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த மரணம் சந்தேகத்தை ஏற்படுத்த, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்ற போது, சுஷ்மிதா, ராகுல் மற்றும் அவரது தந்தை அதை எதிர்த்தனர். இதனால் குடும்பத்தினர் சந்தேகத்தில் உறைந்தனர். இதற்குப் பிறகு, கரணின் தம்பி குனால், சுஷ்மிதாவின் மொபைல் போனில் அவர் ராகுலுடன் செய்த மெசேஜ் உரையாடல்களை பார்த்தபோது, கொலை திட்டம் தெரியவந்தது.
அந்த சாட்களில், ராகுல் — “மருந்தை இன்னும் கொடு”, “முடியலையென்றால் மின்சாரம் கொடு”, “டேப்பால் கட்டிவை” என வழிகாட்டியிருந்தார். மேலும் சுஷ்மிதா, “மருந்துக்குப் பிறகு மூணு மணி நேரம் ஆகுது, இன்னும் உயிரோட இருக்கான்”, “நீயே வந்து மருந்து ஊட்டலாமா?” என கேட்டிருந்தார். இந்த தகவல்களை வைத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக கள்ளக்காதல் உறவில் இருந்ததாகவும் கரணை அழித்து சேர்ந்து வாழவும், அவரது சொத்துக்களை கைப்பற்றவும் திட்டமிட்டதாக உறுதியாகியுள்ளது.
தற்போது சுஷ்மிதா மற்றும் ராகுல் இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கான ஆதாரங்களைப் பெற்று, குற்றச்சாட்டு நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கரணின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவத்தில் விரைவான நீதிக்காக வலியுறுத்தி வருகின்றனர்.
