ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்திலின் மகளான கீர்த்தி மீனா (21), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்கள் திருப்பூர், இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. தம்பதிகள் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், சமீபத்தில், சிவக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது குறித்து கீர்த்தி மீனா கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள், அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்தச் சந்தேகத்திற்கு உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்றை, அதாவது சிவக்குமார் மற்றொரு பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த காணொளியை, நேரடியாக கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்ததும் மனஅழுத்தத்தால் மிகவும் வேதனையடைந்த கீர்த்தி மீனா, தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீர்த்தி மீனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகாத நிலையில் தற்கொலை ஏற்பட்டதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலாகத் தொடங்கிய வாழ்க்கை, இறுதியில் வன்முறை வீடியோ மூலம் முடிவுக்கு வந்தது சம்பந்தப்பட்ட பகுதியில் பெரும் பரபரப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
