சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கணவரின் தலையில் மரக்கட்டையால் பலமாகத் தாக்கிய நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாள நாட்டைச் சேர்ந்த தம்பரு அஸ்ரிகா (50) மற்றும் அவரது மனைவி மாயா (41) ஆகியோர் கடந்த 4 மாதங்களாக சென்னை அம்பத்தூரில்  வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, தம்பதியினர் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த தம்பரு அஸ்ரிகா, தனது மனைவியின் உடமைகளை எடுத்துத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

தனது உடமைகள் எரிவதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மாயா, அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து தனது கணவர் தம்பரு அஸ்ரிகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், மாயாவைக் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.