இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் வரை எடுத்தார். அதன் பிறகு களம் இறங்கிய சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது‌. கடந்த முறை ஆர்சிபி அணியுடன் நடைபெற்ற போட்டியில் 197 ரன்களை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த போட்டியில் 187 ரன்கள் எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தற்போது சென்னை அணி புள்ளி பட்டியலில் 7-ம் இடத்திற்கு பின் தங்கி விட்டது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.