அமெரிக்கத் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலைலாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தகவல்களை அவரது அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தலைலாமாவுக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி செய்திகள் பரவின. இது குறித்து தலைலாமாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் திசைதிருப்பக் கூடியவை. தலைலாமாவுக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் எவ்விதமான நேரடி அல்லது மறைமுகத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.” தலைலாமா தனது வாழ்நாளில் ஒருபோதும் எப்ஸ்டீனை நேரில் சந்தித்தது கிடையாது.

எப்ஸ்டீனுடன் பேசுவதற்கோ அல்லது சந்திப்பதற்கோ தலைலாமா தரப்பிலிருந்து யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டு சில மின்னஞ்சல்கள் மற்றும் புத்தகக் குறிப்புகளில் தலைலாமாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. ஒருவேளை எப்ஸ்டீன் தரப்பு அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், தலைலாமா அதில் பங்கேற்கவில்லை.

 

சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்கள் மற்றும் வீடியோக்களில் அரசியல், வணிகம் மற்றும் ஆன்மீகத் துறையைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் தலைலாமாவின் சீடர்கள் சிலர் எப்ஸ்டீனைச் சந்தித்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்தப் புகார்கள் கிளம்பின.

கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, அது நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய செய்திகளைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என தலைலாமா அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.