பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையிலிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்கத் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், தனது மரபணுவைப் பயன்படுத்தி ‘சூப்பர் மனித இனத்தை’ (Super Race) உருவாக்கத் திட்டமிட்டிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2019-இல் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீன் மீது சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் இருந்தன. இந்நிலையில், தனது பெரும் செல்வம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி மனித இனத்தையே மாற்றியமைக்கும் விபரீதத் திட்டத்தை அவர் வைத்திருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

நியூ மெக்ஸிகோ பகுதியில் தனக்குச் சொந்தமான பிரம்மாண்ட பண்ணை வீட்டில் (Ranch), ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களைத் தனது விந்தணு மூலம் கருத்தரிக்கச் செய்து, தனது மரபணு வழித்தோன்றல்களை உருவாக்க அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ‘பேபி ரான்ச்’ (Baby Ranch) என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் ரகசியமாக அழைத்து வந்துள்ளன.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எப்ஸ்டீன் பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுக்குப் பல லட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்கியும், ஆடம்பர விருந்துகள் அளித்தும் தனது பக்கம் இழுத்துள்ளார். ‘டிரான்ஸ்-ஹியூமனிசம்’ (Transhumanism) எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் மரபணு மாற்றங்கள் மூலம் மனிதத் திறனை மேம்படுத்தும் சிந்தனையில் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.

எப்ஸ்டீனின் இந்தச் சிந்தனை, நாஜிக்கள் பயன்படுத்திய ‘இயுஜெனிக்ஸ்’ (Eugenics) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலம் ‘உயர்ந்த மனித இனத்தை’ உருவாக்கும் ஆபத்தான கொள்கையை ஒத்து இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எப்ஸ்டீன் தனது மரணத்திற்குப் பிறகு தனது உடல், குறிப்பாகத் தலை மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை ‘கிரையோனிக்ஸ்’ (Cryogenics) முறையில் உறைநிலையில் பாதுகாத்து வைக்கவும் விரும்பியுள்ளார். வருங்காலத்தில் தொழில்நுட்பம் வளரும்போது மீண்டும் உயிர் பெறலாம் என்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

எப்ஸ்டீனின் உயில் படி அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. ஆனால், அமெரிக்க நீதித்துறையின் கோப்புகளில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 2002-இல் எப்ஸ்டீன் மூலம் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்த சில நிமிடங்களிலேயே அக்குழந்தை தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டதாகவும் ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு முறையான ஆதாரங்கள் இல்லை.

தற்போது அவரது சொத்துக்கள் மற்றும் ரகசியங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அறிவியல் மற்றும் அரசியலை அவர் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.