உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் அன்வர்கஞ்ச் பகுதியில், பிறந்தநாள் விளம்பரத்திற்காக விடப்பட்ட ஒரு விசித்திரமான சலுகை பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 16 ரூபாய்க்கு ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், அங்குப் பெரும் கூட்டநெரிசலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுத் தள்ளுமுள்ளு உண்டானது.
அன்வர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ‘ஆலம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்’ என்ற கடையின் உரிமையாளரான ரெய்ஸ் ஆலம் என்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் வந்துள்ளது. தனது கடையின் விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவதற்காக அவர் ஒரு விசித்திரமான தந்திரத்தைக் கையாண்டுள்ளார். அதாவது, தனது பிறந்தநாளை முன்னிட்டு “வெறும் 16 நிமிடங்களுக்குக் கடையிலுள்ள அனைத்துப் பொருட்களும் வெறும் 16 ரூபாய்க்கே வழங்கப்படும்” என்று கான்பூரின் பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாகப் பரப்பியுள்ளார்.
இந்த அதிரடி 16 ரூபாய் சலுகை விளம்பரம் கான்பூர் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. இதைக் கேட்டவுடன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நள்ளிரவு நேரத்தில் திரண்டு வந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியின் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கடைக்குள் முந்தியடித்துக்கொண்டு நுழைய முயன்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கிச் சிலருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன.
நிலைமை முற்றிலுமாகக் கைமீறிப் போனதை உணர்ந்த உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைக் தொடர்ந்து ஏசிபி மற்றும் பல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதாகத் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்ற அலறி அடித்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். “ஆலம் மார்ட்டில் அதிகளவில் மக்கள் திரண்டுள்ளதாக நள்ளிரவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் அப்பகுதியில் ஏற்கனவே ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று, மக்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான மற்றும் குழப்பமான விளம்பரங்களைப் பரப்பியுள்ளார். தற்போது அங்குச் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏதும் இல்லை, நாங்கள் எந்த விதமான துஷ்பிரயோகமும் செய்யவில்லை” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஷாப்பிங் மார்ட்டை உடனடியாக மூட உத்தரவிட்ட காவல்துறையினர், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெறும் விளம்பர மோகத்திற்காகத் தவறான வதந்திகளைப் பரப்பிப் பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்த ‘ஆலம் மார்ட்’ உரிமையாளர் ரெய்ஸ் ஆலம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இன்ஃப்ளூயன்சர்கள் மீது காவல்துறை என்ன மாதிரியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற கேள்வி தற்போது கான்பூர் முழுவதும் எழுந்துள்ளது.
