இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் மருத்துவத் துறையினருக்குப் பெரும் வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு அங்கேயே தங்கி வேலை தேடுவதற்கான கால அவகாசம் ஒன்பது மாதங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மறுபுறம், இந்த ஒப்பந்தம் இந்தியத் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தியாவில் இந்தப் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கல்வித் தகுதியை ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதால், அவர்கள் இனி ஐரோப்பிய நாடுகளில் நேரடியாகப் பணிபுரியும் தகுதியைப் பெறுகின்றனர்.

இந்தியத் தொழில்நுட்பத் திறமை மற்றும் மருத்துவ அறிவை ஐரோப்பிய நாடுகளின் மூலதனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஒரு பாலமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. வர்த்தகம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்து வரும் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.