அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தை காலி செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது இந்த இல்லத்திற்கு குடிபெயர்ந்த ஈபிஎஸ், அதன் பிறகு முதலமைச்சராக இருந்தபோதும், கடந்த தேர்தல் வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், கடந்த 15 ஆண்டுகளாக இதே இல்லத்தில்தான் தொடர்ந்து வசித்து வந்தார்.

​2026 தேர்தல் மாற்றங்களுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகவும், திமுகவின் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய அதிகார மையமாகத் திகழ்ந்த இந்த இல்லத்தில் இருந்து ஈபிஎஸ் தற்போது முழுமையாக வெளியேறுகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு அவர் குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகால நினைவுகளுடன் இந்த பவர்ஃபுல்லான அரசு இல்லத்தை எடப்பாடி பழனிசாமி காலி செய்யும் இந்தச் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.