இந்திய கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் ஐபிஎல் (IPL) மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்ந்து, தற்போது அவரது 10 வயது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷியும் கிரிக்கெட் மைதானத்தில் ரன் வேட்டை நடத்தி வைரலாகி வருகிறார். பீகார் மாநிலம் சமஸ்திபூரில் நடைபெற்ற உள்ளூர் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில், ‘கிரிக்கெட் அகாடமி தாஜ்பூர்’ அணிக்காக விளையாடிய 10 வயதே ஆன ஆசிர்வாத், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 87 பந்துகளில் 103 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.  அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 20 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அவரது அண்ணன் உஜ்வலா சூர்யவன்ஷி இந்த சதத்தின் வீடியோ மற்றும் ஸ்கோர்கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த பிஞ்சு சிறுவனின் அதிரடி ஆட்டம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

தனது மகனின் இந்த அசாத்திய சாதனை குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, “என் இளைய மகன் ஆசிர்வாத் சூர்யவன்ஷி இன்று தனது முதல் சதத்தை அடித்து அசத்தியுள்ளான்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவன் தனது அண்ணன் வைபவ் சூர்யவன்ஷி போல ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அனைவரும் அவனுக்கு உங்களது அன்பையும் ஆசியையும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். தனது அண்ணன் வைபவ் சூர்யவன்ஷியைப் போலவே இடதுகை பேட்ஸ்மேனான ஆசிர்வாத்தும் ஆரம்பத்திலிருந்தே பந்துகளை அதிரடியாக விளாசும் ஆக்ரோஷமான ஆட்டக்காரராக அறியப்படுகிறார். ஆசிர்வாத்தின் இந்த மிரட்டலான சதத்தின் உதவியோடு, அவரது தாஜ்பூர் அகாடமி அணி 29.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. சதம் அடித்த பின் ஹெல்மெட்டைக் கழற்றி இந்த 10 வயது சிறுவன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன.