தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகச் செய்திகளில் வந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் களம் முழுவதும் ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிவிட்டுப் பதவிக்கு வந்தவர்களின் ஆட்சியில், சட்டம் ஒழுங்குதான் இப்போது மிக மோசமாக மாறிப் போயிருக்கிறது என்பதற்கு இந்த அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்களே நேரடி சாட்சி என்று அவர் சாடியுள்ளார். தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள இந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!
