ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக், தனது பதவியில் இருந்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி, அதன் சந்தை மதிப்பை சுமார் 4 டிரில்லியன் டாலராக உயர்த்திய டிம் குக், இனி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருக்குப் பின், ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார். இந்தத் தலைமை மாற்றமானது ஆப்பிள் நிறுவனத்தின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டாலும், டிம் குக்கின் விலகல் குறித்த செய்தி வெளியான உடனேயே நாஸ்டாக் பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3% வரை சரிவைக் கண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் டிம் குக் தனது 15 ஆண்டு கால பயணத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஐபோன்களுக்கு அப்பால் ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் மற்றும் சேவைகள் துறையில் மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சென்றார். குறிப்பாக, அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து தனது உற்பத்தி மையங்களை விரிவுபடுத்தியது.

தற்போது ஜான் டெர்னஸ் வசம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதே சந்தை நிபுணர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. டிம் குக் செப்டம்பர் வரை சிஇஓ-வாகத் தொடர்வதோடு, புதிய தலைவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி நிறுவனத்தின் சுமூகமான மாற்றத்திற்கு உதவுவார் என்றும் ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.