
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன,.20) தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த வகையில் 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேதா உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள் உள்ளிட்ட 15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1,541 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை பிரிவுகள் இருக்கிறது. அதோடு தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் போது 79 சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டு, இதன் வாயிலாக சுமார் 70,000 மக்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.