
திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் சிறுமியை சிகிச்சைக்காக அவரது பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் அதிர்ச்சடைந்துள்ளனர்.
மேலும் தங்களது மகளிடம் சம்பவம் குறித்து விசாரித்த போது அந்த சிறுமியால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்த விவரங்களை தெளிவாக சொல்ல தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அச்சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தால் மிகுந்த மன வேதனையில் இருந்த சிறுமியின் தாய் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் சிறுமியின் தந்தை மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்த சிலரது டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த மாதிரிகளின் முடிவு தெரிந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி இறந்த சோகம் மற்றும் மகளின் நிலையை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்தவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.